வீட்டுக்குச் செல்லாத சோகமான வார இறுதிகளும் பரவாயில்லாதவைதான். வீட்டில் இருந்தால் வாசிக்கமுடியும். ஹாஸ்டலில் அது முடியாது என்பதுதான் பெரிய விஷயம். வீட்டிலிருந்து ஹாஸ்டலுக்குப் புத்தகங்கள் எடுத்துப் போக அனுமதியிருக்கவில்லை. அதனால், வார இறுதிநாட்கள் ஊர்ந்துகொண்டே போகும். அந்த சனிக்கிழமைகளில் எழும்பி பல்தேய்த்து தேத்தண்ணி குடித்துவிட்டு, அலுமாரியில் கொறிக்க என்ன இருக்கிறது என்று கிளறிக்கொண்டிருப்போம். என்னைப் போல வீட்டிற்குப் போகாத பாபாத்மாக்கள் தோழிகள் அறைக்கு விசிட் செய்வார்கள். அப்படி யாராவது வந்தால், உண்ணக் கொடுத்தெல்லாம் உபசரிப்போமாக்கும்! :) சில பொழுதுபோகாத நேரங்களில் கீழே விடுதியின் நடுவில் இருக்கும் *தோட்டப்பகுதியில்* இருந்து காரசாரமான குரல்கள் கேட்கும். வார்டனின் காதுகளுக்குக் கேட்காத ஒலியளவிலேதான் விவாதங்கள் நடைபெறும்.
விவாதம் விவாதம் என்று சொல்கிறாளே ஒழிய என்ன விவாதம் என்று சொல்லமாட்டேன் என்கிறாளே என்று நீங்கள் அலுத்துக்கொள்ளலாம். பின்ன, இந்த விவாதம் பற்றி எழுதவந்துதானே, தொடராக்கி உங்களை அறுத்துக் கொண்டிருக்கிறேன். :) பெரும்பாலும் இந்தளவு காரசாரமாக விவாதிக்கும் அளவுக்கு என்ன விஷயங்களோ என்று யோசித்துள்ளேன். ஆனால், அந்த விவாதத்தின் அவசியமும், அவை தமிழ் சமுதாயத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் அளவும் இப்போதுதான் லேசாகப் புரிகிறது.
வேறொன்றுமில்லை.
கமலா? ரஜனியா? விவாதம்தான் அது!
ஐந்தாறு பேர் குசுகுசுவென்று ஆரம்பித்து, விடுதியெங்கும் கூட்டணி சேர்க்கும் இந்த விவாதத்தில் படிப்படியாக அனைவரும் உள்ளிழுக்கப்படுவார்கள். மேலே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நாங்களும் உள்ளிழுக்கப்படுவோம். விவாதக் கூட்டணியில் பேசுபவர், என்னைக் கேட்பவர் யார் என்பதைப் பொறுத்து பதில் சொல்லியிருக்கிறேன். யார் இந்த கமல், ரஜனி என்று கேட்டு, ஏதோ சந்திரமண்டலத்துப் பிரஜையென்று என்னைச் சிலர் பார்த்ததும் உண்டு. எனக்கு சிவாஜியத்தெரியும், நாகேஷைத் தெரியும், பாலையாவைத் தெரியும். மற்றவர்களையெல்லாம் எப்படித்தெரிந்துகொள்வது. விடுதியில் மானம் காத்துக்கொள்வது எப்படி? யாரோ ஒரு புண்ணியவதியின் உபயத்தில் ஒரு சினிமா எக்ஸ்பிரெஸ் கிடைத்தது. ஒரு வாரம் வைத்துப் புரட்டியும் எல்லோரும் ஒரே மாதிரித் தெரிந்தார்கள்.
கவனிக்க! இப்போது நாந்தான் திரைப் பார்வை எழுதுகிறேன். அழுக்குப் பையனில் இருந்து, தனுஷ் பையன் வரைக்கும் தெரிந்துகொண்டிருக்கிறேன். எல்லாம் காலம் செய்த மாயம். :)
சண்டியர் விருமாண்டி பாடல்கள் கேட்டபோது மனதில் எழும்பிய நினைவுகள் விடுதியில் ரஜனி பெரிதா? கமல் பெரிதா என்று கிளம்பும் விவாதம்தான்.
ஆ..... சொல்ல மறந்துவிட்டேனே! பெரும்பாலும் கமல் அணியினரே வெல்வர்.
I think we, the Vembadi girls really had good taste. (any comments from the Sri Lankans here? )
ஆரம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பின்னேரமே ஹாஸ்டல் திரும்பிய நான், பலர் திங்கள் அதிகாலையில் பள்ளிச் சீருடையுடனும் துணிமூட்டையுடனும் வருவதைக் கவணித்தேன். அதற்குப் பிறகு நாங்களும் திங்கள் அதிகாலையிலேயே ஹாஸ்டலுக்குத் திரும்பிப் போகத்தொடங்கினோம்.
அந்த அதிகாலை வேளைகளும் ரம்யமானவை. அப்போது சிறை செல்லுவதுபோல உணர்ந்தாலும், மனதின் ஓரத்தில் பதிந்துபோன விஷயங்களை அவ்வப்போது அசைப்போட்டிருக்கிறேன். வானுக்காக காத்திருக்கும் பொழுதுகள். 'வெள்ளைச் சட்டையில் ஊத்தைப் பிரட்டாதே. தோளை நிமிர்த்தாதே, தலையைக் குனி, நேருக்கு நேர் பார்க்காதே' என்று ஒரே *தே தே தே* என்று ஒலிக்கும் அம்மாவின் குரல், ஊரே அமைதியாக இருப்பது. வீட்டிற்கு எதிர் முனையில் இருக்கும் மீனாட்சியின் (அவவின்ற பெயர் கள்ளுக் கடை மீனாட்சியாம், பிறகுதான் அவவின்ற பட்டப்பெயரை அம்மம்மா சொன்னவ.) வேலியில் இருந்த பூவரசன் இலைகளை பிய்த்து விசில் ஊதியது. ஊதியிருக்கிறீர்களா? காம்புடன் இலையைப் பிய்க்கவேண்டும். இலையை நன்கு துடைத்துவிட்டு - ஊத்தை பிரட்டாதே! - நுனியை கொஞ்சமாக மடிக்கவேண்டும். பிறகு இலையை உடைக்காமல், பிய்க்காமல் சுருட்டவேண்டும். நல்லா இறுக்கிச் சுருட்டினா ஊதுப்படாது. கொஞ்சம் விட்டுச் சுருட்டவேண்டும். சுருட்டின பிறகு ஓரத்தை மடிக்கவேண்டும். மடிச்ச பக்கத்தில ஊதினா, 'ப்ப்பீஈஈஈஈப்,' 'பீயீஈஈப்' என்று ஓசை வரும். பல திங்கட்கிழமை காலை வேளையில் என்னுடைய 'ப்பீஈஈஈப்' ஐக்கேட்டு ஆடுகளும் கோழிகளும் அலறி அடித்து ஓடிப்போயிருக்கின்றன. தங்களுக்குள் என்னைத் திட்டித் தீர்த்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?
வெள்ளிக்கிழமை வீட்டிற்குப் போகவேண்டுமென்றால், ஆறாம் வகுப்புக் காரரை வீட்டிலிருந்து யாராவது கூட்டிக்கொண்டுபோகவேண்டும். ஒவ்வொரு வாரமும் வந்துபோகமுடியாது என்பதால், அம்மா வரமாட்டார். என்னுடைய கசின்கள் வீட்டிற்குப் போவதைப் பார்த்தால் அழுகையாக வரும். ஹொஸ்டல் விஷயங்கள் பிடிபட பிடிபட, வீட்டிற்குப் போயிருந்தபோது, அம்மாவிடம் இருந்து ஒரு கடிதம் கொண்டு வந்தால், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பவரோடு வீட்டிற்குப் போகலாம் என்று தெரிந்துகொண்டு அடிக்கடி வீட்டிற்குப் போகமுடிந்தது.
வேம்படியிலும் ஹொஸ்டலிலும் சேர்ந்த புதிதில் அப்பா விடுமுறையில் வந்து தங்கியிருந்தார். ஒவ்வொரு வெள்ளியும் வீட்டிற்கு வானில் தூங்கியபடி போவது ஞாபகம் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஏறக்குறைய இருபது மைல் தொலைவில் புங்குடுதீவு இருக்கிறது. வழியில் வேலணை என்று இன்னொரு தீவும் இருக்கிறது. இரண்டு இடங்களில் கடலில் போடப்பட்டிருக்கும் சாலையில் நீண்டநேரம் வான் ஓடும். சாலையின் இரண்டு பக்கமும் கடலில் ஏதோ ஒரு நாணல்போன்ற, ஆனால் தடிமனான தாவரம் வளர்ந்திருக்கும். அதை வேறெங்கோ பிய்த்து வாயில் வைத்துப் பார்த்த ஞாபகம் வருகிறது. ஒரே துவர்ப்பு. முகத்தில் வந்து அறையும் காற்றும் துவர்ப்பாகத்தான் இருந்தது. ஆனால், அது மிகவும் பிடித்திருந்ததற்குக் காரணம் - அது ஹொஸ்டலில் இருந்து வீட்டுக்குப் போகும் சுதந்திரப் பயணம் என்பதால் இருக்கலாம். ;)
வீட்டில் சினிமாப்பாட்டுக்கு தடா என்பதால், இதுபோன்ற பயணங்களிலேயே பாட்டுக் கேட்க முடிந்தது. இப்போதும் எண்பதுகளிலும் எழுபதுகளிலும் வந்த பாட்டுகளைக் கேட்கும்போது கடற்காற்று முகத்தில் வந்து வீசும் உணர்வு ஏற்படுகிறது.
ஒவ்வொரு மாணவிக்கும் இரும்புக்கட்டிலும், சிறிய மர அலுமாரியும் தரப்படும். விடுமுறை முடிந்து கொண்டு வரும் சூட்கேஸ்களை வீட்டிற்குத் திருப்பி அனுப்பி விடுவோம். பிறகு விடுமுறைக்கு முன்பு வரும்போது திரும்பிக் கொண்டு வருவார்கள். மெத்தை, தலையணை, போர்வை எல்லாம் வீட்டில் இருந்துதான் வரும். மெத்தையை மட்டும், விடுமுறைக்குப் போகும்போது நன்றாகக் கட்டி ஸ்டோர் ரூமில் போட்டுவிட்டுப் போகலாம். அதுவும் பெயர், வகுப்பு, விலாசம், சாதகக்குறிப்பு ஆகியவற்றோடு ஏதாவது அடையாளமும் வைத்துவிட்டுப்போகவேண்டும். விடுமுறை முடிந்துவந்தது, உடனே வந்து மெத்தையைக் கண்டுபிடித்து எடுத்துவிடவேண்டும். இல்லையென்றால் கோவிந்தாதான்.
விடுதி வாழ்க்கையை ரொம்பவும் ரசிக்கவில்லையென்றாலும் சில விஷயங்கள் மனதில் தங்கியிருக்கின்றன. அப்படியே சிலரும் மனதில் தங்கியிருக்கின்றனர். முடிந்தவரை எழுதுகிறேன்.
விடுதியில் ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் பைப்பில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மற்றவர்கள் எல்லாரும் கிணற்றில் கிள்ளித்தான் குளிக்கவேண்டும். பெரும்பாலானவர்கள் விடியற்காலையிலேயே குளித்துவிடுவார்கள். பிற்பகலில்/இரவில் குளிப்பவர்கள் பள்ளிக்குப் பக்கத்தில் இருந்து வங்கியில் அனைவரும் வீடு செல்லக்காத்திருப்பர். முதலில் ஏனென்று விளங்காவிட்டாலும், பிறகு பெரியவர்களால் எச்சரிக்கப்பட்டோம். காலையில் எழுந்து குளிக்கப்போவது ரொம்பவும் அருமையான சம்பவம். பள்ளியே நிசப்தமாக இருக்கும். காலில் செருப்பு அணிந்திருந்தாலும், பாம்பு இருக்ல்லாம் என்று யாராவது பயமுறுத்துவார்கள். கிணற்றில் தண்ணி அள்ளவேண்டுமென்பதால், எங்களுடன் சிலர் சேர்ந்துகொள்வார்கள். வார்டனின் கண்ணிலும், அவர் பாலூட்டி வளர்க்கும் பாம்பான watchman ( :) ) கண்ணிலும் படாமல் பகுங்கிச் செல்வோம். ஒரு செட் பைப்புகள் ஆறாம், ஏழாம் வகுப்பினருக்கான பௌதீகவியல் பரிசோதனைக் கூடத்திற்குப் பின் இருந்தது. அதிகாலையில் அந்தப்பக்கம் செல்லும்போதெல்லாம், முதன்முதலில் அயோடின் பார்த்தது, புரோதப் பரிசோதனைக்காக தலைமுடியை எரித்து மணந்தது எல்லாம் ஞாபகம் வரும்.
விடுதியில் ஒரு அக்கா இருந்தார். பெயர் மறந்துவிட்டது. புங்குடுதீவுதான். எனக்கெல்லாம் சவுக்காரம் - அதாங்க சோப்பு - இரண்டு கிழமை வருவது ரொம்ப அபூர்வம். அவரோ மூன்று மாதம் தொடர்ந்து பயன்படுத்துவார். மூன்று மாதம் என்பது குறைவாகவும் இருக்கலாம். முகம் கழுவுவதென்றால் சவுக்காரத்தை இரண்டு முறை தடவுவார், அப்படியே முகத்தில் தேய்த்துக்கொள்வார். பலரும் அவரைப் பகிடிபண்ணுவார்கள். நானெல்லாம் எலிக்குஞ்சு என்பதால், மௌனமாகப் பார்த்துக்கொண்டு இருப்போம்.